எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
சென்னை,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதனால், மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் எந்தவித மர்மப்பொருளும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மேலும் கோயம்புத்தூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இதுபோன்று விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.






