அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அது போல, இன்று தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மிரட்டல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இல்லங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் திமுக அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய 3 பேர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






