நித்தியானந்தா, சீடர்கள் மீதான வழக்கு: 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 26 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தமான விவசாய நிலங்களை நித்தியானந்தா தியான பீடத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்.
இந்த நிலையில் நித்தியானந்தா மீதான புகார்களால் அவர் மீது அதிருப்தி அடைந்தேன். இதனால் நித்தியானந்தா பீடத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெற்றேன். அதனால் ஆத்திரம் அடைந்த அவரது சீடர்கள் என் நிலத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான புகாரின்பேரில் ராஜபாளையம் கிழக்கு மற்றும் சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில் என்னைப்பற்றியும், குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் நித்தியானந்தா உள்ளிட்டவர்கள் மீது விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கடந்த ஓராண்டாகியும் விசாரணையை போலீசார் விரைவுபடுத்தவில்லை. எனவே அந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் புகாரின்பேரில் பதிவு செய்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.






