அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கரூரில், செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சிகள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத வழிபாட்டுத் தளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இதுபோல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும்போது அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
த.வெ.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூட்டங்கள், ரோடு ஷோக்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும், அங்கு எத்தனை பேர் நிற்கலாம், எத்தனை பேர் உட்காரலாம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்த பிறகுதான் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டங்கள், ரோடு ஷோக்களை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது பரிந்துரைகளை நேற்றே வழங்கிவிட்டதாக கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்தனர். தொடர்ந்து அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






