மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஆர்.வி.கதிர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு திரும்பி அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு விடுத்த அறிக்கையில், மெட்ரோ ரெயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம். ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. ஆகவே குறைந்த மக்கள் தொகை உடைய நகரங்களுக்கு இதை செயல்படுத்த முடியாது. இதன் காரணமாக கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டு முந்தைய கணக்கெடுப்பு. மதுரை மாவட்டத்தில் தற்போது 27 லட்சத்து 29,671 வாக்காளர்கள் உள்ளனர். அவ்வாறெனில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்படாத குடியிருப்புவாசிகள் ஆகியோரையும் சேர்த்தால் மதுரையின் மக்கள் தொகை 30 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.

எனவே மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரிசெய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசுக்கும், தமிழக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலித்து மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வாதிடுகையில், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது மனுதாரர் கேட்ட நிவாரணத்தை எப்படி வழங்குவது? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 16-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com