தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு

கோப்புப்படம்
ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுகிறது. மதுரை மாவட்டம் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் இடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான அளவில் சாதிய ஒடுக்கு முறைகள் அரங்கேறி வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் இதுபோன்ற சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
அதிமுகவில் குழப்பம் நிலவுவதற்கு பாஜக தான் காரணம். சசிகலாவால் செயல்பட முடியாமல் போனதற்கு யார் காரணம்? ஓ.பி.எஸ். தனிமையாக செல்வதற்கு யார் காரணம்? டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கியதற்கு யார் காரணம்? செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுவதற்கு யார் காரணம்? என்றால் இதற்கு எல்லாம் ஒரே பதில் பாஜக தான். அதிமுக தலைவர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






