தமிழக மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருது - முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்

தேசிய நீர் விருதுகள் பிரிவில் தெற்கு மண்டலத்தில் சிறந்த மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
தமிழக மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருது - முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்
Published on

சென்னை,

மத்திய அரசின் தேசிய நீர் விருதுகள் (National Water Awards) மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு (Jan Sanchay Jan Bhagidari Awards) விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்ற மாவட்டங்களின் கலெக்டர்கள் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், மத்திய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி ஆகியோர் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மரு.ஆர்.சுகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் இவ்விருதுகளை பெற்றதற்காக மதுரையில் நேற்று (7.12.2025) முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை மறுசீரமைப்பு பணிகள் மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல், புதிய நடைமுறைகளைப் பின்பற்றுதல், நீர் பயன்பாட்டு செயல்திறனை ஊக்குவித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல், இலக்கு பகுதிகளில் உள்ள மக்களின் பங்கேற்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புத்தாக்க துறையின் கீழ் தேசிய நீர் விருதுகள் (National Water Awards) மாநில விருதுகள், மாவட்ட அளவிலான விருதுகள், கிராம ஊராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொது சங்கங்கள், நீர் பயனர் சங்கங்கள், பெருநிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS), ஜல் ஜீவன் திட்டம் (JJM), 15-வது ஒன்றிய நிதிக்குழு மானியம் (CFC), 6-வது மாநில நிதிக்குழு மானியம் (SFC), சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் (MLACDS), நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் (MPLADS) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளின் கிளைகள் புத்தாக்கம், மழை நீர் சேகரிப்புகள் அமைத்தல், நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேம்பாட்டு பணிகளை பாராட்டி 4 மாவட்ட அளவிலான விருதுகள் மற்றும் 1 கிராம ஊராட்சி அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு 6-வது தேசிய நீர் விருதுகள் (National Water Awards) பிரிவில் தேசிய அளவில் தெற்கு மண்டலத்தில் சிறந்த மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சிக்காக 3-வது இடத்திற்கான விருதை பெற்றுள்ளது.

அத்துடன் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் (Jan Sanchay Jan Bhagidari Awards) பிரிவின் கீழ் சிறந்த மாவட்டத்திற்கான விருதுகளை கோயம்புத்தூர் (3வது இடம்), நாமக்கல் (10வது இடம்), ராமநாதபுரம் (13 வது இடம்) மாவட்டங்கள் பெற்றுள்ளன.

புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 18.11.2025 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்று இந்திய ஜனாதிபதியிடம் இருந்து கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com