‘செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்’ - அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராக உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
“செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரூ, திருப்பதிக்கு இணைப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. 56 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதியும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் வரையில் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வசதிக்காக மலிவு விலை உணவகம், 2 தனியார் உணவகங்கள், போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் இடம், கலந்தாய்வு கூடம், கழிவுநீர் வெளியேற்று நிலையம், முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன.
இந்த புதிய பஸ் நிலையம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
தி.மு.க. ஆட்சியில் எது செய்தாலும் அதில் குற்றம் காண்பது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வழக்கமாகிவிட்டது. மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ஆகியவற்றால் தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராக உள்ளது.
எங்கேயாவது ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி அரசு செயல்பட்டு வருகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.






