சென்னை உயிரியல் பல்வகை குறியீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


சென்னை உயிரியல் பல்வகை குறியீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
x

சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை உயிரியல் பல்வகை குறியீட்டை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை (CITY BIODIVERSITY INDEX - CHENNAI ) வெளியிட்டார். சென்னை மாநகரின் உயிரியல் பல்வகையை மதிப்பிடவும், ஒப்பிடவும் படிப்படியாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது நகர உயிரியல் பல்வகை குறியீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நகர உயிரியல் பல்வகை குறியீடு, "சிங்கப்பூர் குறியீடு" எனவும் அழைக்கப்படுகிறது. இது 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 9-வது உயிரியல் பல்வகை மாநாட்டில் (COP-9) அங்கீகரிக்கப்பட்டது. இந்த குறியீடு உலகளாவிய 23 அளவுகோல்கள் வழியாக நகரங்களின் உயிரியல் பல்வகை பாதுகாப்பை அளவிடவும், மதிப்பிடவும், வலுப்படுத்தவும் உதவுகிறது. உலக நகரங்களை தேசிய மற்றும் சர்வதேச உறுதிமொழிகளோடு ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதலாக “சிங்கப்பூர் குறியீடு” ஒரு முன்னோடி என கருதப்படுகிறது.

இந்த குறியீடு ஒரே நேரத்தில் மதிப்பெண் அட்டவணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகிறது. நகரங்கள் தங்களின் இயற்கை வளங்களை மதிப்பிட, உயிரியல் பல்வகை மாற்றங்களை கண்காணிக்க, பாதுகாப்பு முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும், நகர திட்டமிடலில் சூழலியல் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்கவும் இது உதவுகிறது.

சென்னை பெருநகருக்கு, இக்குறியீடு அதிவேக நகர்ப்புற வளர்ச்சியையும், சதுப்பு நிலங்கள், பசுமை விரிப்பு, இயற்கை இனங்களைப் பாதுகாப்பதையும், சமநிலைப்படுத்துவதற்கும் வழிகாட்டுதலாகும். முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்ட இத்தரவு, உயிரியல் பல்வகையை நகர திட்டமிடலில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டி, பசுமை விரிப்பை விரிவுபடுத்தும் திட்டங்கள், கார்பன் சேமிப்பு, வெப்பக் குறைப்பு மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு ஆகியவற்றில் இவற்றின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பங்கேற்பு அடிப்படையிலான பாதுகாப்பு முயற்சிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கான தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இது தமிழ்நாட்டின் "பசுமை தமிழ்நாடு திட்டம்" உள்ளிட்ட பல்வேறு மாநில முயற்சிகளுடன் இணைந்து நகரங்களை நிலையான வளர்ச்சிக்குறியை நோக்கி நகர்த்துகிறது. 2024-ஆம் ஆண்டில், சென்னை 72 புள்ளிகளில் 38 புள்ளிகளை (18 அளவுகோல்களில்) பெற்றது.

நகரம் சிறப்பாக செயல்பட்ட பகுதிகள்:

இயற்கை பகுதிகளின் விகிதம் - 20.12 % நிலப்பரப்பில் இன்றும் காடுகள், சதுப்பு நிலங்கள், கடற்கரை மற்றும் இயற்கை வளங்களை கொண்டுள்ளது. சூழலியல் இணைப்பு - சதுப்பு நிலங்கள், நதிகள் மற்றும் பசுமை பாதைகள் இணைந்து உயிரியல் பல்வகைக்கு ஆதரவளிக்கின்றன.

பூர்வீக பறவை இனங்கள் - நகர்ப்புறத்தில் 90 வகை பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகரம் மத்திய ஆசிய பறவைகள் பறக்கும் பாதையில் அமைந்திருப்பதால் முழுப் புள்ளிகள் பெற்றுள்ளது.

நிறுவன ஆதரவு - கிண்டி தேசிய பூங்கா, பாம்பு பூங்கா, செம்மொழி பூங்கா, போன்றவை அதிக புள்ளிகளை பெற்றன. சவால்கள் இருந்தாலும், சென்னை தனது பசுமை மற்றும் நீலவளங்களால் வரையறுக்கப்படுகிறது.

கிண்டி தேசிய பூங்கா – இந்தியாவில் சிறியதாயினும் மிக அதிக உயிரிப் பல்வகை கொண்ட தேசிய பூங்காக்களில் ஒன்று. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் - ராம்சர் தளம், 115 பறவை இனங்கள், 46 மீன் இனங்கள் மற்றும் பல விலங்குகளின் வாழிடம். ஐ.ஐ.டி. சென்னை வளாகம் - பசுமை காடு, மான் மற்றும் 300க்கும் மேற்பட்ட தாவர இனங்களின் வாழிடம்.

தியோசபிக்கல் சொசைட்டி வளாகம் மற்றும் MCC மைதானம் - பசுமை வளமும் பாரம்பரிய மரங்களும். இவை அனைத்தும் நகரின் "சுவாசப்பை” போல செயல்பட்டு, காலநிலை தாங்கும் திறனை, பொது சுகாதாரத்தை, கல்வியை மேம்படுத்துகின்றன.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சதுப்பு நில மீட்பு, பசுமை தமிழ்நாடு திட்டம், காலநிலை மாற்ற திட்டம், கடலோர பாதுகாப்பு திட்டம் போன்ற பல முயற்சிகளின் விளைவாக இந்தக் குறியீடு தயாரிப்பு சாத்தியாமாகியுள்ளது.

சென்னை நகர உயிரியல் பல்வகை குறியீடு "ICLEI South Asia", "சென்னை மாநகராட்சி" மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும். "ICLEI South Asia" என்பது 100-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச வலையமைப்பாகும். தமிழ்நாடு முதல்-அமைச்சர், மேலும் 5 நகரங்களுக்கு உயிரியல் பல்வகை குறியீடு உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story