சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் இடமாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவி வகித்து வந்த நிலையில், அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவி காலியானது. இதனையடுத்து அந்த பதவிக்கு மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது.
கொலீஜியம் அளித்த பரிந்துரைப்படி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் கடந்த செப்டம்பர் 27-ல் பதவியேற்றார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அவருடைய பணியிட மாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது. நடப்பு ஆண்டின் செப்டம்பர் 28-ல் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.






