வேலூரில் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூரில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வேலூரில் ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ரூ.7 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இன்று (25.6.2024) சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காட்பாடி ரெயில் நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் வரவேற்றனர்..
காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகம் செல்லும் வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.6.2025) வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48", சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை
வேலூர் மாவட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கூடிய அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு 22.8.2023 அன்று முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, 2,15,278 சதுர அடி நிலப் பரப்பளவில், 3,77,263 சதுர அடி கட்டிட பரப்பில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இம்மருத்துவமனையின் தரைத்தளத்தில் மகளிர் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அவசரகால அறுவை சிகிச்சை அரங்கம், குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்க நோயறிதல் துறை, இரத்த மாதிரி சேகரிப்பு கூடம், சலவை துணி தொகுதி ஆகியவையும், முதல் தளத்தில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, குழந்தைகள் பிரிவு ஆகியவையும், இரண்டாம் தளத்தில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, மருத்துவ உருவகப்படுத்துதல் ஆய்வகம், வளர் இளம் பருவத்தினருக்கான பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவையும், மூன்றாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு, பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தொடர் கவனிப்பு பிரிவு ஆகியவையும், நான்காம் தளத்தில் மகப்பேறு கால முன் கவனிப்பு பிரிவு, மகப்பேறு கால பின் கவனிப்பு பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவையும், ஐந்தாம் தளத்தில் பெண்கள் நலவியல் மருத்துவ பிரிவும், ஆறாம் தளத்தில் ஆய்வகங்கள், நுண்ணுயிரியல் பிரிவு, உயிர் வேதியியல் பிரிவு, நோய் கண்டறிதல் துறை ஆகியவையும், ஏழாம் தளத்தில் அறுவை அரங்கங்கள், மயக்க மருந்துக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்மருத்துவமனையில் மொத்தம் 560 படுக்கைகள் மற்றும் 11 அறுவை சிகிச்சை அரங்குகள், 9 மின்தூக்கிகள், சமையலறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிணவறை மற்றும் உயர்மின்னழுத்த அறை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் திறப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், காட்பாடி வட்டம், திருவலம் பேரூராட்சியில் 1.20 கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டிடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டிடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் பேர்ணாம்பட்டு நகராட்சியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டிடம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மகமதுபுரம் துணை சுகாதார நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் என மொத்தம் 7 கோடி ரூபாய் செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் .எஸ். ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், ப. கார்த்திகேயன், ஜே.எல். ஈஸ்வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் மா. சுனில்குமார், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., வேலூர் கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர் தேரணிராஜன், அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் மு. ரோகிணிதேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






