பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கமுதியில் இருந்து பசும்பொன் கிராமம் வரையிலும் 4300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஒரு டி.ஐ.ஜி., 20 சூப்பிரண்டுகள், 27 கூடுதல் சூப்பிரண்டுகள் உள்பட மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின், 118-வது ஜெயந்தி மற்றும் 63-ம் ஆண்டு குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழாவை ஒட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






