முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் மக்களிடம் எடுபடாது: செல்லூர் ராஜு

பெரியாரை இழிவாக பேசிய சீமானை கைது செய்து இருக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி போராடினார். அவர் தான் டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என 10 மாதமாக முதல்-அமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கேட்டார். மேலும் 10 மாதங்களாக எம்.பி.க்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் பதிலளிக்கவில்லை.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை தொடர்ந்து தான் முதல்-அமைச்சர் அதனை எதிர்க்கிறோம் என்றார். 2026-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.
திமுகவை ஆதரித்த கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறது. வேங்கை வயல் விவகாரத்தில் திமுகவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. பெரியாரை இழிவாக பேசிய சீமானை திமுக அரசு கைது செய்து இருக்க வேண்டும். திராவிடர் கழகம், முதல்-அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






