சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு துணிச்சல் இல்லை: ஆளூர் ஷாநவாஸ்

விஜய் பேசுவது எல்லாம் பொய்ப்புரட்டுதான் என்று ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.
சென்னை,
விசிக நிர்வாகி ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பத்திரிகையாளர்களை சந்திக்க தலைவர் விஜய்க்கு துணிச்சல் இல்லை. ஆளுநர் ரவி, அண்ணாமலை இடத்தை விஜய் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. நாகை தொடர்பாக விஜய் பேசியதில் எனது ஒரு கேள்விக்கு பதிலளிக்கட்டும்.
நடிகராக விஜய் நாகை வந்தாலே அவருக்கு இவ்வளவு கூட்டம் கூடும். விஜய்யின் புகழ் என்பது சினிமாவின் மூலம் கிடைக்கக்கூடிய புகழ். நாகையில் முழுக்க முழுக்க பொய்த்தகவல்களை பரப்பிவிட்டு சென்றுள்ளார். இப்படியே போனால் விஜய் மக்களால் நிராகரிக்கப்படுவார்.
விஜய் பேசுவது எல்லாம் பொய்ப்புரட்டுதான். அவதூறான, இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார். விஜய் மீது விசிகவுக்கு வன்மம் கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். ஆனால் விஜய் இருக்கிற கட்சிகள் மீது வன்மத்தை கக்குகிறார்.
வன்மத்தை கக்குகிற அரசியல் யாருடைய அரசியல்? அதனால்தான் அண்ணாமலை, ஆளுநர் ரவியுடன் ஒப்பிட்டு அவரைப் பற்றி பேசுகிறேன். விஜய்க்கு எல்லாதரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் தற்போது நடிகராக இல்லை; அரசியல்வாதியாகிவிட்டார். திமுக, அரசு மீது அடுக்கடுக்கான அவதூறுகளை பரப்புகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.






