அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதல்-அமைச்சர் இன்று மீண்டும் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந்தேதி தமிழகத்தில் தொடங்கியது. வங்க கடலில் சமீபத்தில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக உருமாறக்கூடும் என்று என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த புயல், கனமழையை ஏற்படுத்த கூடும். இதனை முன்னிட்டும், பருவமழையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையார் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. அதற்கேற்ப, சமீபத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவருடன் மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயரதிகாரிகளும் சென்றிருந்தனர். பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என அப்போது அவர் பார்வையிட்டார். அதுபற்றி அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார்.






