தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை


தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை
x

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் மூலம் எஸ்.ஐ.ஆர். என்கின்ற வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ச.ம.க. செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாநகர செயலாளர் முத்துசெல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெகுஜன மக்கள் மீது பி.சி.ஆர். வழக்குப்பதிவு செய்து விடுகின்றனர். குறிப்பாக திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, திருவைகுண்டம் போன்ற காவல் நிலையங்களில் அதிகப்படியாக பி.சி.ஆர். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வெகுஜன மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆகவே மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பி.சி.ஆர். சட்டத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் மூலம் எஸ்.ஐ.ஆர். என்கின்ற வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்த வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வருகின்ற 11-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் அதி விரைவு ரெயில் மட்டுமே பல காலமாக இயங்கி வருகிறது. இதனால் ரெயில்களில் பயணச்சீட்டு பெற முடியாமல் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தென்மாவட்ட மக்களின் சிரமம் போக்கிட சென்னைக்கு தூத்துக்குடியில் இருந்து கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும். மேலும் தூத்துக்குடியில் இருந்து வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story