கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேருக்கும் 3-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு 10 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.
பின்னர், அந்த 3 பேரும் கல்லூரி மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முற்புதர் அருகில் அரைகுறை ஆடையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியின் ஆண் நண்பரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கைதான 3 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்தனர். தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி, இன்று மாலை 4 மணிக்கு மூவரையும் மீண்டும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 3 பேரையும் வரும் 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.






