கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம்: 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்


கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம்:  3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 4 Nov 2025 2:20 AM IST (Updated: 4 Nov 2025 8:09 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

கோவை,

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு வந்த 3 பேர் காரில் காதலர்கள் இருப்பதை அறிந்தனர். காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர்.

இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை.இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர்.. அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப்பிடித்தனர். இதன்படி குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். காலில் குண்டடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார் சூறை

இந்தசம்பவம் பற்றி அறிந்த நாம் தமிழர் கட்சியினர் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு செயல்பட்டு வந்த தனியார் பாரை அடித்து நொறுக்கினர். பார் அங்கு செயல்பட்டு வருவதால்தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

போலீஸ்காரரின் மகள்

பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி, போலீஸ்காரரின் மகள் ஆவார். அவருடைய தந்தை பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார்.

1 More update

Next Story