கோவை மாணவி பலாத்கார வழக்கு: கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் குண்டர் சட்டம் தற்போது பலாத்கார குற்றவாளிகள் மீது பாய்ந்துள்ளது.
கோவை மாணவி பலாத்கார வழக்கு: கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

 கோவை,

கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2-ந் தேதி கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை பீளமேடு போலீசார் அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் கோர்ட்டில் விசாரணை தொடங்க உள்ளது.

இதற்கிடையே, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்மீது திருப்பூர் மாவட்டத்திலும், கோவை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமீனில் விடுதலையான இவர்கள், கோவை இருகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வந்துள்ளனர். அதன் பிறகு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இவர்கள் மீது கோவை அருகே உள்ள கோவில்பாளையம் போலீஸ் நிலையத்திலும் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்மீது போடப்படும் குண்டர் சட்டம் தற்போது இவர்கள் மீது பாய்ந்துள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு, கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் போடப்பட்டவர்கள் ஒரு ஆண்டு ஜாமீனில் விடுதலையாகி வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com