விண்வெளி சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் - முத்தரசன்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல் பதித்துள்ள இஸ்ரோ வாழ்த்துகள் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விண்வெளி ஆய்வில் 41 ஆண்டுக்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய மைல்கல் பதித்துள்ளது. நீண்ட பல பத்தாண்டுகளாக நடந்து வரும் விண்வெளி ஆராய்ச்சியில், சோவியத் சோசலிச ஒன்றியத்தின் ஆதரவுடன் இந்திய விண்வெளி வீரர்கள் ராகேஷ் சர்மா, ரவீஸ் மல்ஹோத்ரா ஆகியோர் விண்வெளியில் 1984 ஏப்ரல் மாதம் பயணித்து சாதனை படைத்தனர். இதில் ராகேஷ் சர்மா, விண் வெளியில் ஏழு நாட்கள் 21 மணி நேரம், 40 நிமிடம் இருந்து சாதனை படைத்து பூமிக்கு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்தும் விண்வெளி ஆய்வில் புதுப்புது சாதனைகளை படைத்து வந்தாலும், 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, அமெரிக்காவின் புளோரிடா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்களும் நேற்று பயணம் சென்றுள்ளார். இவர்கள் ஆக்சியம் 4 என்கிற ஆய்வுக் களத்தின் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, சுபான்சு சுக்லா "பயிர்களை விளைவித்தல்" உள்ளிட்ட ஏழு பிரிவு ஆய்வுகளை மேற்கொள்வார் என்ற தகவல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைமை, தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியின் பொறுப்பில் இருந்து வரும் காலத்தில், அமைந்துள்ள இந்த சாதனை பயணம் ஆய்வுத் தளத்தில் சிகரம் தாண்டி சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல் பதித்துள்ள இஸ்ரோ இயக்குநர் உள்ளிட்ட விஞ்ஞானிகள், பயிற்றுநர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






