கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி - செல்வப்பெருந்தகை வாழ்த்து

கோப்புப்படம்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மீண்டும் உறுதியாக வெற்றி பெறும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றது மூன்று மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 2.09 கோடி வாக்குகளையும் 45.3 வாக்கு சதவீதத்தையும் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி பெற்று தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களினால் 1.86 கோடி பயனாளிகள் மாதந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். இந்த அடிப்படையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 2.5 கோடி வாக்குகளை பெறுவதை இலக்காக கொண்டு இந்தியா கூட்டணி செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவர கையேட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவிகிதம் பங்களித்து தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதன்படி ரூ.31.19 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு மதிப்பையும் தனிநபர் வருமானமாக ரூ.3.61 லட்சமாகவும் உயர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
இந்தியா கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை. பாமக உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தருகிற வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






