கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரளியாற்றில் குளித்த இடம் ஆபத்தானது - எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பர்களோடு பரளியாற்றில் குளித்துள்ளார்.
குமரி,
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பரளியாறு ஓடுகிறது. கடந்த 18-ந் தேதி நண்பர்களுடன் குமரன்குடி வழியாக பரளியாற்றுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வந்துள்ளார். அங்கு பள்ளமான பகுதியில் இறங்கி நண்பர்களுடன் குளித்தார். இவர் குளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயத்தில் இந்த பகுதி பாசி படர்ந்து வழுக்கும் தன்மை கொண்டது. ஆபத்தான இடம் என்பதால் உள்ளூர்வாசிகள் கூட இந்த இடத்தில் இறங்கி குளிக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு இதே பகுதியில் பாறையில் நடந்து கொண்டிருந்தவர் கால் வழுக்கி நீரில் மூழ்கி இறந்த சம்பவம் நடந்தது. இது ஆழமான பகுதி என்ற விவரம் எதுவும் தெரியாமல் கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பர்களோடு வந்து ஆற்றில் குளித்துள்ளார்.
மேலும் இந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பதாகை இல்லை. எனவே குமரன்குடி பகுதியில் ஆபத்தான இடம் என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால் அஸ்வினை போல பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






