எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்- திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்


எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்- திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
x
தினத்தந்தி 10 Aug 2025 11:20 AM IST (Updated: 10 Aug 2025 12:36 PM IST)
t-max-icont-min-icon

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. அண்ணா மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். அதிமுக இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர் . சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் தோற்றுவித்த அதிமுக என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி அமைய வழிவகுத்தது.

இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா. "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ தி.மு.க.வையோ அல்லது தி.மு.க. தலைவரையோ திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story