கடலூர்: நடப்பு ஆண்டில் இதுவரை சாலை விபத்தில் 425 பேர் பலி


கடலூர்: நடப்பு ஆண்டில் இதுவரை சாலை விபத்தில் 425 பேர் பலி
x

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இது வரை 425 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல் பழுதாகி இருந்தது. இதை அகற்றி விட்டு, புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டது. இதை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பழுதான சிக்னல்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்களில் உள்ள பழுதான சிக்னல்கள் சீரமைக்கப்பட உள்ளன. அதேபோல் விபத்தை குறைக்கவும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த ஆண்டு சாலை விபத்தில் 536 பேர் பலியாகி உள்ளனர். நடப்பு ஆண்டில் இது வரை 425 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலான விபத்துகள் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அதாவது 60 சதவீதம் இறப்புகள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டுள்ளது. ஆகவே கையில் செல்போனை எடுத்து செல்வது போல இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் எடுத்து செல்லுங்கள். ஹெல்மெட் அணிந்து செல்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், கார்த்திக் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story