புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்


LIVE
தினத்தந்தி 29 Nov 2024 9:56 AM IST (Updated: 30 Nov 2024 12:50 AM IST)
t-max-icont-min-icon

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Live Updates

  • 29 Nov 2024 7:20 PM IST

    விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    பெஞ்சல் புயல் நாளை கரை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • செங்கல்பட்டு, விழுப்புரத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை
    29 Nov 2024 6:58 PM IST

    செங்கல்பட்டு, விழுப்புரத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை

    புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மைய துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் உத்தரவின்பேரில் தலா 30 வீரர்கள் கொண்ட 2 குழுக்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிக்கு விரைந்தனர். மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என மீட்பு படை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 29 Nov 2024 6:24 PM IST

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பெஞ்சல்’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்குபோது விழுப்புரம், கடலூர், புதுவை, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழகம், புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.”

    இவ்வாறு அவர் கூறினார். 

  • 29 Nov 2024 6:10 PM IST

    கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்ற உத்தரவு

    பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. அப்போது 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புயல் எச்சரிக்கை காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் கட்டுமான தளங்களில் அமைக்கப்பட்டுள்ள கிரேன்களை உடனே அகற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளம்பர போர்டுகளையும் கீழே இறக்கி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 29 Nov 2024 5:50 PM IST

    கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

  • 29 Nov 2024 5:49 PM IST

    சென்னை முதல் புதுவை வரை வெளுத்து வாங்கப்போகிறது மழை.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

    தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். இது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமடையும்.

    இந்த புயலானது சென்னை முதல் புதுவை வரை மிக மிக கனமழையைக் கொடுக்கப் போகிறது. நாளை (சனிக்கிழமை) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்று இரவு ஒரு சிறிய அளவிலான மேகக்கூட்டம் 50-60 மி.மீ. மழையை கொடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • 29 Nov 2024 5:47 PM IST

    புயல் உருவானதைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை பகுதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  • 29 Nov 2024 5:41 PM IST

    மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்

    சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் உள்ள பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை வரை தாழ்வான மற்றும் நீர் தேங்கும் மெட்ரோ பார்க்கிங்குகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல தொடரும் என்பதால் பயணம் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 29 Nov 2024 5:06 PM IST

    துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    * கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    * சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்; பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது

  • 29 Nov 2024 4:35 PM IST

    புயல் எதிரொலி: நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story