தீப விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் அடையாள உண்ணாவிரதம்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
தீப விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் அடையாள உண்ணாவிரதம்
Published on

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் பிரபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை திருப்பரங்குன்றம் மலை வரலாறு மிகவும் பழமையானது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில், குகைக்கோவிலாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.

எனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது. 1926-ம் ஆண்டு இங்கு சிவில் பிரச்சினை எழும் வரை அந்த மலையின் மீது உள்ள தீபத்தூண் பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவை பின்பற்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்து, இதற்காக அனுமதி கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே வருகிற 13-ந்தேதி (அதாவது நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வேலவதாஸ், கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து இருப்பதாக கூறி போலீசார் அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என தெரிவித்தனர்.

பின்னர் அரசு வக்கீல் அபுல்கலாம் ஆசாத் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆதரவாகவோ, எதிர்த்தோ எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் தரப்பினர் திருப்பரங்குன்றத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்கலாம் என தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் கோரும் இடத்திலேயே 50 பேர் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது. கட்சி கொடிகளை பயன்படுத்தக்கூடாது. ஒரேயொரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள், இந்து அமைப்புகள் சார்பில் தற்போது உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com