காமராஜர் குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பா.ஜனதா புகார் மனு


காமராஜர் குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பா.ஜனதா புகார் மனு
x

யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகனிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய ‘மை இந்தியா' யூடியூப் சேனல் நடத்தி வரும் முக்தார் அகமதுக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது. அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் நாடார் அமைப்பினரும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதாவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. சாதி, மத, அரசியல் பேதங்களை கடந்து அனைவராலும் போற்றப்படும் காமராஜரை கொச்சைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள அவதூறு வீடியோவை நீக்க கோரியும், அவரது யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகனிடம் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சார்பில் புகார் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை தமிழக பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் மத்திய மந்திரி எல்.முருகனை சந்தித்து வழங்கினர்.

இந்த மனுவில், முக்தார் அகமது தனது யூடியூப் சேனலில் காமராஜர் ஆட்சி காலத்தில் தான் ஊழல் அதிகம் இருந்தது. காமராஜர் தனது நாடார் சமுதாயத்திற்கு மட்டுமே உதவினார். அவரது ஆதரவில் கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டது என்று வேறு ஒருவர் குற்றச்சாட்டுகள் வைத்ததாக கூறி பல்வேறு அவதூறுகளை காமராஜர் மீது சுமத்தி உள்ளார். எனவே, அவரது யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story