நீதிபதி குறித்து அவதூறு: ஜாமீன் கோரி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வரதராஜனை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். அதேவேளை, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைதளங்கள் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி அவதூறு பரப்பியதாக சென்னை கோடம்பாக்கத்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் (வயது 64) என்பவரை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிறையில் உள்ள வரதராஜன் ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 18ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வரதராஜன் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரதராஜன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து வரதராஜனின் ஜாமீன் மனு குறித்து பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு வழக்கை ஒத்தி வைத்தது.






