டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிர்கள் பல பலியாகியுள்ளது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் உயிர்களை இழந்ததில் ஆழ்ந்த வருத்தம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
அதே நேரத்தில், பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






