'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வளையகாரனூர் அரசு பள்ளி மேற்கூரையை சீரமைக்க ஏற்பாடு

பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை மாற்று இடத்தில் வகுப்புகள் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே வளையகாரனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது. குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் மேற்கூரையில் இருந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் அலறி அடித்து கொண்டு பள்ளியில் இருந்து வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்தி கடந்த 18-ந்தேதி ‘தினத்தந்தி’யில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்கள், மாவட்ட நிர்வாக பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் வளையகாரனூர் பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாடம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து வளையகாரனூர் பள்ளி மாணவ, மாணவிகள் 49 பேருக்கு கத்தேரி தொடக்கப்பள்ளியில், வளையகாரனூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல் பாடங்கள் நடத்த தொடங்கினர். இதனால் வளையகாரனூர் தொடக்கப்பள்ளி தற்காலிகமாக சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது.
மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.






