திமுக கூட்டணி வலுவாக உள்ளது - திருமாவளவன்

'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு என திருமாவளவன் பேசினார்.
மதுரை,
விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;
"திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே கூட்டணியின் வலிமையை பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. தொகுதிப் பங்கிட்டில் கூடுதலான இடங்களை கேட்போம். பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும்.
கொள்கை அடிப்படையில் எதிரிகள் யார் என்பதை முடிவெடுப்பதில் துணிவு தேவை. பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் செல்லாது. அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவோடு செல்ல முடியாது. கூட்டணியில் இருக்கும் போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடையாது" என்றார்.






