ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க மறுக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

கோப்புப்படம்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்கப்படுதில்லை எனவும், விடுதி மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசின் முகத்திரையை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.
தன் பிள்ளை ஒருவேளை (அசைவ) உணவையாவது வயிறார உண்ணட்டும் என்ற ஆசையில் தான் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒருவேளை உணவைக் கூட கொடுக்க இயலாதவர்கள் அரசு மாணவர் விடுதிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ஆனால் திமுக அரசின் ஆட்சியில் பள்ளி சத்துணவில் புழு, பூச்சி, பல்லி மிதக்கிறது. அரசு விடுதிகளில் உணவு மறுக்கப்படுகிறது. இப்படி எளிய பின்புலமுள்ள மாணவர்களின் உணவு விஷயத்தில் திமுக அரசு ஒரு மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதன் பின்னணியில் ஆளும் வர்க்கத்தின் ஆணவம் ஒளிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
மேலும், குடியைக் கெடுக்கும் சாராயக்கடை வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி இயங்கும் பொழுது, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை மட்டும் எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும்? திமுக ஆட்சியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளை, விடுதியில் இருந்து துரத்தினால் அவர்கள் எங்கு போவார்கள்? இதுதான் திமுகவின் எல்லோருக்குமான ஆட்சியா? வெற்று விளம்பரங்களிலும் பாராட்டு விழாக்களிலும் மதி மயங்கிக் கிடக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை எப்போதுதான் கவனிப்பார்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






