தி.மு.க. வெறுப்பு; விஜய் சொந்தமாக பேசுவது போல் தெரியவில்லை - திருமாவளவன்

விஜய்யின் பேச்சு பிறரால் தூண்டப்பட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தி.மு.க.வை தீயசக்தி என்று த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது திருமாவளவன் கூறியதாவது;-
“விஜய் சொந்தமாக இதையெல்லாம் பேசுவது போல் தெரியவில்லை. அவர் எதை சொன்னாலும் சுயமாக சிந்தித்து, அவரது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பேசினால் அவருக்கு நல்லது. அவரது பேச்சு திட்டமிட்ட அல்லது பிறரால் தூண்டப்பட்ட பேச்சாக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
விஜய் எதற்காக கட்சி தொடங்கினார்? என்ன கொள்கைகளை பேசுகிறார்? எதிர்காலத்தில் என்ன செய்வார்? என்ற எதிர்பார்ப்போடு அவரது உரைகளை மக்கள் கவனிக்கிறார்கள். ஆனால் அவரது பேச்சு முழுவதும் தி.மு.க. வெறுப்பு என்பதாக மட்டுமே இருக்கிறது. இதை மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






