தி.மு.க. யாரையும் வேண்டாம் என்று கூறும் கட்சி அல்ல: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில்


தி.மு.க. யாரையும் வேண்டாம் என்று கூறும் கட்சி அல்ல: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
x

இயற்கையாக ஏற்படும் மாற்றங்களால் அவர்கள் தி.மு.க.வை தேடி வந்தால் உரிய மரியாதை கிடைக்கும் என்று முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே.ஏ.செங்கோட்டையன். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சியில் செல்வாக்குடன் இருந்த கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன் வருகிற 5-ந் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக அரசியல் வல்லுனர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட வந்த அமைச்சர் சு.முத்துசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-

கே.ஏ.செங்கோட்டையன் ஒரு கட்சியில் உள்ள முக்கிய தலைவர் என்கிற நிலையில் உள்ளவர். அவரைப்பற்றியும் அவரின் நிலைப்பாடு குறித்தும் கருத்து சொல்வது சரியல்ல. தற்போதைய நிலையில் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அப்படி ஏதேனும் கூறினால்அது கெடுதலை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தும். தி.மு.க. யாரையும் வேண்டாம் என்று கூறும் கட்சி அல்ல. எந்த கட்சியில் இருந்து வந்தாலும் தி.மு.க. வரவேற்பு கொடுக்கும்.

அதற்காக இன்னொரு கட்சியில் உள்ளவர்களை தொல்லை செய்து, மனதில் சங்கடத்தை ஏற்படுத்தி, பிரச்னை ஏற்படுத்துவதில்லை. இயற்கையாக ஏற்படும் மாற்றங்களால் அவர்கள் தி.மு.க.வை தேடி வந்தால் உரிய மரியாதை கிடைக்கும். அதை நடைமுறையில் அனைவருமே பார்க்கிறீர்கள்.எந்த காரணத்தை கொண்டும், அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை.இவ்வா அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

1 More update

Next Story