திமுகதான் போலி வாக்காளர்களை இணைக்கிறது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

போலி வாக்காளர்கள் விவகாரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு தகுதி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.: ஆட்சியில் இருக்கும் திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டுப்போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்தார்.
ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஒருமுறை சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒன்றை மணி நேரத்தில் 1,600வாக்குகள் பதிவாகின. வாக்காளர் பட்டியலில் குளறுபடி தொடர்பாக ஆட்சியில் இருக்கும் திமுகதான் பேச வேண்டும். அதிமுகவால் எப்படி போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும்.
மதுக்கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து விற்பனை பிரதிநிதியிடம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்பதால், நாங்கள் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கிதான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில், 15 கோடி ரூபாய் மதுபானங்கள் விற்பனை மூலமாக மேலிடத்துக்கு சென்று கொண்டிருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் சாதிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.






