இந்தி திணிப்பு என்ற தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன்
போதுமான பயிற்சியின்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு புதுச்சேரி முன்னாள் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் பல ஆண்டுகளாக துறை சார்ந்த விழா கொண்டாடுவதை வேண்டுமென்றே இந்தி திணிப்பு என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் ஒரே மாதிரி மொழிவாரியாக தொலைக்காட்சி பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக டிடிதமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது இங்கே தமிழ் எங்குமே விடுபடவில்லை.
தங்கள் குடும்ப தொலைக்காட்சிக்கு தமிழ் பெயர் வைக்காமல் ஆங்கில பெயரை வைத்துக்கொண்டு தமிழ் பெயர் பற்றி பேசுகிறார் முதல்வர் என்பது தான் வேடிக்கை. நம் பிரதமர் மோடி எந்த மொழிக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை நம் தமிழ் மொழிக்கு கொடுக்கிறார்.
ஆனால் மத்திய அரசுக்கு தமிழுக்கு எதிரானது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்வர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, மும்பை துறைமுகத்திற்கு தமிழ் பெயர் மற்றும் இராஜராஜ சோழரின் நினைவுச்சின்னம் என்று மாநிலம் கடந்தும் தமிழின் சிறப்பை எடுத்துச் சென்றிருக்கிறார் நம் பிரதமர்.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு மட்டுமே அடையாளமான செங்கோலை எல்லா மாநிலத்தவரும் கூடும் பாராளுமன்றத்தில் நிறுவி அலங்கரிக்கச் செய்திருப்பது நம் தமிழ்நாட்டிற்கு பெருமை தானே அந்தப் பெருமையும் எதிர்த்தவர்கள் தான் திமுகவினர்.
சென்னை தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறையை பார்த்தாலே பாடுபவர்கள் போதுமான பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை.
வராத மழையை விரட்டினோம்... புயலைத் தடுத்தோம்... என்று நாடகமாடுவதைப் போல இல்லாத இந்தி திணிப்பை திணிப்பு திணிப்பு என்று நாடகமாடினால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.