திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கியது: மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
திருப்பூர்,
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. தனது அனைத்து அணிகளையும் களத்தில் இறக்கி மக்களுடனான தொடர்பை பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மற்ற மண்டலங்களிலும் நடைபெற உள்ளது.அரசின் நலத்திட்டங்களை விளக்கியும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டங்கள் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்காக 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை, ‘விடியல்’ கட்டணமில்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி’ விடுதி என மகளிர் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவும், சட்டமன்றத் தேர்தல் பணியில் மகளிர் அணியினர் திறம்பட செயலாற்றும் வகையிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரனம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்குகிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.. 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 15 பேர் வீதம், மொத்தம் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவினாசி சாலையில் உள்ள ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு காரனம்பேட்டை மாநாட்டு திடலுக்கு சென்றார். அவருக்கு வரும் வழியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டகர்கள் மத்தியில் திறந்த வேனில் வந்த மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கை அசைத்தபடி வருகை தந்தார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. கட்சியினர் மற்றும பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.






