'சீமானை தப்ப விடாதே': மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

சீமானை கைதுசெய்ய வலியுறுத்தி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக, சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்காக ஆஜரானார். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக சீமான் பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், 'சீமானை தப்பவிடாதே' என்ற தலைப்பிட்டு திராவிடர் பெரியார் கழகம் சார்பில் மதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "தமிழக அரசே காவல் துறையே பாலியல் குற்றவாளி சீமானை தப்ப விடாதே. உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி வன்புணர்ந்து 7 முறை கருக்கலைப்பு செய்த பாலியல் குற்றவாளி சீமானை கடுமையான சட்டத்தில் கைது செய், சிறையிலடை" என்று எழுதப்பட்டிருந்தது. இது மதுரை நகரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.






