சென்னையில் ‘டபுள் டக்கர்’ பஸ் சோதனை ஓட்டம்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது
சென்னை,
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை ரசித்தபடியே பயணம் செய்தவர்களின் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.
குறிப்பாக மாமல்லபுரம் நோக்கி வந்த டபுள் டக்கர் பஸ் உத்தண்டி டோல்கேட்டை கடக்கும்போது அங்குள்ள மேற்கூரை மீது உரசி செல்கிறதா? எனவும் அங்கு அந்த பஸ் கடக்கும் போது ஆய்வு செய்யப்பட்டது. சுமார் ஓரு அடி உயர இடைவெளியில் பஸ் மேற்கூரையை உரசாமல் வெற்றிகரமாக மாமல்லபுரம் நோக்கி இயக்கப்பட்டது.
முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டபுள் டக்கர் பஸ் மாமல்லபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தவுடன் அதற்குள் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஏறி பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக மாமல்லபுரத்திற்கு இயக்கப்படும் இந்த பஸ்கள் விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப இயக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதாரண மின்சார பஸ்களில் 60 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலையில், இந்த டபுள் டக்கர் பஸ்களில் 90 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார சார்ஜ் செய்யப்பட்டு, அதிநவீன பேட்டரி மூலம் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையிலும், டீசல் செலவை குறைக்கும் வகையில் இந்த பஸ் சேவையை அதிகப்படுத்தி இயக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






