குடிபோதையில் தகராறு; தள்ளிவிட்டதில் புதுமாப்பிள்ளை பலி... காதல் மனைவி கைது

ஈரோட்டில் கணவர் தற்கொலை என நாடகமாடிய அவருடைய காதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மதன்குமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து மதன்குமார் மயங்கி கிடந்ததாக கூறி உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந்தேதி காலை மதன்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சுஜித்ரா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மதன்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சுஜித்ராவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில், மதன்குமாருக்கும், சுஜித்ராவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மதுபோதையில் மதன்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுஜித்ரா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மதன்குமார் சுஜித்ராவின் கழுத்தை பிடித்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க அவர் மதன்குமாரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மதன்குமாரின் தலை தரையில் மோதியதில் காயமடைந்து மயங்கினார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன. இதனை தொடர்ந்து கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுஜித்ராவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.






