தமிழ்மகன் உசேனை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி

தமிழ்மகன் உசேனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
சென்னை,
அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ் மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்மகன் சென்னையில் உள்ள அப்பல்லோ பர்ஸ்ட் ரெட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் மகன் உசேன், தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ் மகன் உசேன் குணமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடனருந்தனர்.






