மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்


மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்
x

2 மூதாட்டிகளை அடித்துக்கொலை செய்து நகைகளை பறித்துக்கொண்டு, உடல்களை கல்குவாரியில் வீசிச்சென்ற சம்பவம் நடந்தது.

சேலம்

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கணவர் மாரிமுத்து இறந்துவிட்டதால் மகன் கந்தசாமியுடன் பாவாயி வசித்து வந்தார். மேலும் பாவாயி அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வாராம்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாவாயி, வேலை செய்ததற்காக அங்குள்ள கல்குவாரி அருகே வசித்து வரும் விவசாயியிடம் கூலியை வாங்க வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி பெரியம்மா (75). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 3 மகன்கள் உள்ளனர். மகன் அங்கப்பன் என்பவருடன் பெரியம்மா வசித்து வந்தார். மேலும் அவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை தினமும் கல்குவாரி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் பெரியம்மா தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் அவரும் வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீடு திரும்பின. இதனால் அவரது மகன் தனது தாயாரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடும் பணியில் இறங்கினார்.

அப்போது தான் ஒரே நாளில் 2 மூதாட்டிகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 2 மூதாட்டிகளையும் அவர்களது உறவினர்கள் தேடும் பணியில் களமிறங்கினர். அப்போது தான் அங்குள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் 2 மூதாட்டிகள் பிணமாக கிடந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விமலா, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் 2 மூதாட்டிகளின் உடல்களை மீட்டனர். அப்போது தான் 2 மூதாட்டிகள் அணிந்திருந்த தங்க தோடு, மூக்குத்தி, காலில் அணிந்திருந்த வெள்ளி காப்புகள் காணவில்லை என்பது தெரிந்தது.

அதன்அடிப்படையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 2 மூதாட்டிகளும் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள், நகைகளை பறித்து அவர்களை அடித்துக்கொன்று உடல்களை கல்குவாரி குட்டையில் வீசிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 மூதாட்டிகளின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகைக்காக 2 மூதாட்டிகளை கொன்று உடல்களை கல்குவாரி குட்டையில் வீசிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இதன்படி நகைக்காக 2 மூதாட்டிகளை கொலை செய்த சேலம் மாவட்டம் காமலாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (53) என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அய்யனார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story