திருவண்ணாமலை கோவில் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் தாமரை குளத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் இருந்து கழிவுகள் குளத்தில் திறந்துவிடப்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பொதுவாகவே ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜனை நியமனம் செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து மின்சார வாரியம் தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.