ஓரினசேர்க்கை விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை: ஆசிரியர் கைது


ஓரினசேர்க்கை விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை: ஆசிரியர் கைது
x

என் சாவுக்கு காரணம் பாபு என மாணவர் எழுதி வைத்து இருந்தார்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பியவர், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்து இருந்த அந்த மாணவர் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். நேற்று முன்தினம் காலையில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அவர் இறந்து கிடந்தார். அப்போது பள்ளிக்கு வந்தவர்கள் அவர் இறந்து கிடப்பது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்து கிடந்த மாணவர், இறப்பதற்கு முன்பாக பள்ளி சுவரில், என் சாவுக்கு காரணம் பாபு என எழுதி வைத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து யார் அந்த பாபு? என போலீசார் விசாரித்தனர். அப்போது, பாபு, அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், ஆசிரியர் பாபுவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த என்ஜினீயரிங் மாணவர், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது அந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் பாபுவுக்கும், மாணவருக்கும் ஓரின சேர்க்கை பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக, விடுமுறைக்கு அந்த மாணவர் ஊருக்கு வரும்போதும், செல்போனிலும் ஆசிரியர் பாபுவுக்கு ஓரின சேர்க்கை தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஆசிரியர் பாபு, இனிமேல் இந்த பழக்கத்தை தொடர வேண்டாம் என்று மாணவரை கண்டித்து உள்ளார். மேலும் அவரது மொபைல் எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளார். அந்த மாணவரின் செயல்பாடுகள் குறித்து அவரது பெற்றோர் மற்றும் அவரது அண்ணனிடம் ஆசிரியர் பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், இனிமேல் எந்த தொந்தரவும் வராது என ஆசிரியர் பாபுவிடம் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவரை அவரது அண்ணன் கண்டித்து கல்லூரிக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவர், ஆசிரியர் பாபுவை பழி தீர்த்து அவருக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டு என் சாவுக்கு காரணம் ஆசிரியர் பாபு என்று சுவரில் எழுதி வைத்து உள்ளார். மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர்.

மாணவரை தற்கொலை செய்ய தூண்டியதாக அவரது அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாபுவை(40) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story