தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுகிறார் இபிஎஸ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக தந்ததும் உங்களுக்கு அது புரியவில்லையா? என பாஜகவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக வந்துள்ள என் அன்புக்குரிய பயனாளி பெருமக்களே,என்னுடைய பாசத்திற்கும், பேரன்பிற்கும் உரிய மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்திருக்கக்கூடிய எனதருமை தாய்மார்களே, சகோதரிகளே,பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திண்டுக்கல் - புரட்சியின் பெயர்! எழுச்சியின் பெயர்! வீரத்தின் பெயர்! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலு நாச்சியாரும் - மருது சகோதரர்களும் - ஊமைத்துரையும், தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்ட ஊர்தான், இந்த வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய இந்த திண்டுக்கல்.
“சினந்து நிற்கும் சிங்கங்களே” என்று தன்னுடைய படைவீரர்களை அழைத்த ஹைதர் அலியும், “இருநூறு ஆண்டுகள் ஆடுகளைப் போல் வாழ்வதைவிட இரண்டே ஆண்டுகள் புலியாக வாழ்வதே மேல்” என்று கம்பீரம் காட்டிய திப்பு சுல்தானும் நடமாடிய இடம் இந்த திண்டுக்கல். மருதுபாண்டியர், விருப்பாட்சி கோபால் நாயக்கர், ஊமைத்துரை என்று மூவரும் சேர்ந்து திண்டுக்கல், பழனி மலையில் 4 ஆயிரம் வீரர்களை இணைத்துகொண்டு போரிட்டார்கள். அப்படிப்பட்ட தீரர்கள் வாழ்ந்த இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை வரவேற்க காத்திருக்கும் உங்களுக்கு இனிப்பான சர்க்கரைப் பொங்கலை போல அறிவிப்பை வழங்கிவிட்டுதான், இங்கு வந்திருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரையில், இது ‘ஐ.பி.’ மாவட்டம். திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ, அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக் காத்து, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நம்முடைய அமைச்சர் ஐ.பி.
அதேபோல, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரின் துறையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய ஒரே ஒரு சாதனையைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டு காலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு 1 கோடியே 79 இலட்சத்து 81 ஆயிரத்து 152 மெட்ரிக் டன். ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் வெறும் நான்கரை ஆண்டுகளில், 1 கோடியே 99 இலட்சத்து 75 ஆயிரத்து 710 மெட்ரிக் டன் கொள்முதல் நாங்கள் செய்திருக்கிறோம். நன்றாக கவனியுங்கள் - அ.தி.மு.க.வின் பத்தாண்டுகளை விட நம்முடைய ஐந்தே வருடத்தில், 19 இலட்சத்து 94 ஆயிரத்து 558 மெட்ரிக் டன் அதிகமாக நாம் கொள்முதல் செய்திருக்கிறோம். இது சாதாரணமானது அல்ல; மிகப் பெரிய சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர்தான் நம்முடைய சக்கரபாணி அவர்கள்.
இன்றைய விழாவை பொறுத்தவரைக்கும், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 இலட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு, ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன். மொத்தம், ஆயிரத்து 595 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் விழாவாக இது அமைந்திருக்கிறது.
இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, இது அரசு விழாவா இல்லை ஒரு மாநாடா என்று வியப்பாக இருக்கிறது. அந்தளவுக்கு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய ஐ.பி அவர்களுக்கும், அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் . சரவணனுக்கும், அதேபோல, மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் முகங்களில், மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றுதான், ஏராளமான திட்டங்களை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம். நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உட்கட்டமைப்பும் வளர வேண்டும். இந்த சமச்சீரான வளர்ச்சிதான் நம்முடைய திராவிட மாடலின் இலக்கணம். அதற்கு அடிப்படையான பணிகளை செய்து திராவிட மாடல் கொள்கையை வலிமைப்படுத்தி வருகிறார் நம்முடைய ஐ.பி. இந்த மாவட்டத்திற்கு வந்தவுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களைப் பற்றி நான் அவர்களிடத்தில் கேட்டேன். உடனே, பெரிய லிஸ்டையே அண்ணன் ஐ.பி. அவர்கள் என்னிடத்தில் வழங்கினார்! அதில் முக்கியமான சில பணிகளை மட்டும் நான் ஹைலைட்டாக சொல்ல விரும்புகிறேன்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலமாக, பத்தாயிரம் வீடுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டப்படுகிறது. இதில் 6 ஆயிரத்து 915 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித் துறை மூலமாக மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு இலட்சத்து 29 ஆயிரம் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
* 27 ஆயிரத்து 973 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஒரு இலட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது. நான் பெருமையோடு சொல்கிறேன் - தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல்
*மாவட்டத்தில்தான் அதிகப்படியான பட்டாக்களை வழங்குகிறோம். நகர்ப்புற பகுதியில், 2 ஆயிரத்து 605 பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
* நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 82 விழுக்காட்டிலிருந்து 99 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
* 72 ஆயிரத்து 896 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சத்தான – சுவையான உணவை சாப்பிடுகிறார்கள்.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில், 4 இலட்சத்து 433 பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இப்போது, இரண்டாம் கட்டமாக 53 ஆயிரத்து 179 பேருக்கு வழங்குகிறோம்.
* புதுமைப் பெண் திட்டத்தில், 11 ஆயிரத்து 858 மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
* தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 8 ஆயிரத்து 984 மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
* 6 இலட்சத்து 64 ஆயிரம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் இன்றைக்கு பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
* இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் பேரின் உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம்.
* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக, இதுவரை 1 இலட்சத்து 23 ஆயிரம் பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
* நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 89 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
* உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தினோம். அந்த முகாம்களில் இதுவரை 1 இலட்சத்து 65 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
* நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 26 ஆயிரம் பேர் இதுவரை பயனடைந்திருக்கிறார்கள்.
* முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கும் தாயுமானவர் திட்டத்தில், 90 ஆயிரம் பேர் இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பயன் பெற்று வருகிறார்கள்.
* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 64 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
* வெற்றி நிச்சயம் திட்டத்தில் பயிற்சி பெற்ற 166 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
* திண்டுக்கல் மாநகராட்சி, 6 பேரூராட்சிகள், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் 636 ஊரகக் குடியிருப்புகளுக்கான காவிரி நீரை ஆதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மூலம் 8 இலட்சத்து 27 ஆயிரம் மக்கள் பயனடைய இருக்கிறார்கள்.
* சின்னாளப்பட்டி, பாளையம், சித்தையன்கோட்டை, வத்தலக்குண்டு பேரூராட்சிகளில், புதிய பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.
* பல்வேறு ஊர்களில், பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
* அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் கட்டப்பட்டு இருக்கிறது.
* இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம் கட்டப்பட்டிருக்கிறது.
* சிறுமலையில் பல்லுயிர்ப் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது.
* இன்றைய விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் மிக முக்கியான திட்டங்களில் சிலவற்றை மட்டும் நான் சொல்கிறேன்.
* பழனி முருகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க மண்டபம் கட்டப்பட இருக்கிறது.
* ஒட்டஞ்சத்திரம் நகராட்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
* பண்ணைக்காட்டில் துணை மின் நிலையம்
* ஒட்டஞ்சத்திரம் கோதையுறம்பில் தானிய சேமிப்புக் கிடங்கு
* பல்வேறு ஊர்களில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடங்கள்
* பெருமாள் மலையில், பொது சுகாதார அலுவலகக் கட்டடம்
* பூம்பாறை, பூலத்தூரில் துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைய இருக்கிறது.
இத்தனை முத்திரை திட்டங்களும் - உட்கட்டமைப்பு பணிகளும், சிறு தொடக்கம் மட்டும்தான். அதற்கென்று இவ்வளவு தூரம் வந்துவிட்டு, உங்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் நான் போவேனா? போனால் ஐ.பி. என்னை விடுவாரா? சக்கரபாணி தொல்லை தாங்கமுடியாது – செந்திலாக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியாக இருந்தாலும் சரி, அதேபோல, நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அவர்களும் தொடர்ந்து கேட்பார்கள். இவைகள் எல்லாம் உணர்ந்து தான் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான 8 புதிய அறிவிப்புகளை இந்த மேடையில் உங்கள் முன்னால் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
1. முதலாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 14 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
2. இரண்டாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சியில், இப்போது இருக்கும் பழைய பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
3. மூன்றாவது அறிவிப்பு - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் புனித தீர்த்தங்களான இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
4. நான்காவது அறிவிப்பு - புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
5. ஐந்தாவது அறிவிப்பு - அதிக அளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மார்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான
முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
6. ஆறாவது அறிவிப்பு - கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த “சுற்றுலா முதலீட்டு பூங்கா” கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலமாக அமைக்கப்படும்.
7. ஏழாவது அறிவிப்பு - கண்வலிக் கிழங்கு உற்பத்தியில், நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பயிருக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசுத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
8. எட்டாவது அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் நகராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.
இப்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன தேவைகள் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறோம். இதனால் தமிழ்நாடு, வரலாறு காணாத வளர்ச்சியை இன்றைக்கு பெற்று வீரநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. உறுதியாக நம்முடன் நிற்கிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக, நாட்டு மக்கள் எல்லோருமே பாராட்டும் அளவிற்கு, சாதனைத் திட்டங்களை செய்துகொண்டு இருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, 2026 புத்தாண்டு பிறந்ததும், இன்னும் அதிகமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் செய்திகளில் பாத்திருப்பீர்கள். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்த நான் ஆணையிட்டிருக்கிறேன். அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறுபடியும் நாம் உறுதி செய்திருக்கிறோம். இதன் மூலமாக, நிச்சயமற்ற எதிர்காலம் என்ற நிலையிலிருந்து நம்பிக்கை அளிக்கும் எதிர்காலத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்! இப்போது அரசு ஊழியர்கள் கொடுக்கின்ற பேட்டிகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்ன சொல்கிறார்கள், “எங்கள் ஓய்வுகால வாழ்க்கையை முதலமைச்சர் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார். இந்த அறிவிப்பு மூலம் ஆறரை இலட்சம் பேர் வாழ்க்கையில் முதல்-அமைச்சர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.
மற்றொரு பக்கம், நாட்டில் சாமானிய மக்கள் ஒருவர்கூட நிம்மதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் - இந்த திட்டத்தையெல்லாம் “செய்யவே முடியாது” என்று சொல்லிகொண்டு இருந்தார்கள். ஆனால், நாம் செய்து காட்டியிருக்கிறோம்.
அதேபோல், அடுத்த முக்கிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடியே 22 இலட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாட 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அந்த ரொக்கம் மட்டுமல்ல, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு வழங்கவும் ஆணையிட்டிருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுவரையில் எந்த வருடமும் இல்லாத வகையில் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாளை நான் சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கயிருக்கிறேன். அதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை என்று எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப் போகிறோம். வருகின்ற பொங்கல், உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல்.
இதுமட்டுமா! இரண்டு நாட்களுக்கு முன்பு, 20 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்கின்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். அதன் முதற்கட்டமாக 10 இலட்சம் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கிறோம். இதனால் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற அனைத்து படிப்புகள் சார்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படுகிறது. Dell, Acer, H.P. போன்ற உலகத் தரமான கம்பெனிகளின் லேப்டாப்-ஐ தான் நம்முடைய மாணவர்களின் கைகளில் நாம் வழங்கியிருக்கிறோம். “நீங்கள் நன்றாக படியுங்கள் - மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்! உலகம் உங்கள் கையில்” என்று நான்அந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறேன்.
ஆனால், கடந்த ஆட்சியில், இந்த திட்டத்தின் நிலைமை என்ன? 2019-ஆம் ஆண்டு பழனிசாமி அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். எப்போது 2019-ஆம் ஆண்டே நிறுத்திவிட்டார் - அதுவும் சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியது தெரியுமா? “68 கோடி ரூபாய் மதிப்பில்
பெறப்பட்ட 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்துவிட்டார்கள்” என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் வெட்டவெளிச்சமாக அதில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரமாக இருக்கிறது.
சோஷியல் மீடியாவில், இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒருவர் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். என்னவென்றால், “பொங்கல் பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் - மகளிர் உரிமைத் தொகையாக ஒரு ஆயிரம் ரூபாய் - புதுமைபெண் திட்டத்தில் மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் - விடியல் பயணம் மூலமாக மாதம் தோறும் 1000 ரூபாய் சேமிப்பு - மாணவ, மாணவியருக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் - அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பொங்கல் போனஸ் என தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுகளும் கிடைக்கப் போகிறது என்று அதில் சொல்லியிருந்தார்கள்.
நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு அதாவது, அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம் இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பாஜக மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.
அதுமட்டுமல்ல, 997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசைப் பாராட்டுகிறார்கள்.
தலைமைச் செயலகத்தில் வாரத்தில் எப்படியாவது இரண்டு நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பணிகளை நான் தொடங்கி வைத்து அந்த விழாவில் பங்கேற்றேன். நம்முடைய ஆட்சியில், இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகதான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது, ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.
இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை. அது இனியும் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். இந்த ஸ்டாலின் இருக்கின்றவரை அது நடக்கவே நடக்காது. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு சிலர், இங்கு இப்படி பேசி, வடமாநிலங்களில் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என்பதுதான் அவர்களின் எண்ணம்.
தமிழ்நாடு வந்த உள்துறை மந்திரி அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கிவிட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
“தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா... வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். ஐயா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம். 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால்
“அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தால், பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளும்” என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித் ஷா அவர்கள் நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்
நீட்-ஐ விடாப்பிடியாக திணிக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காமல், தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும், தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையை குறைக்கும், வட மாநிலங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும், பாஜக ஆட்சி அமையதான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பாடுபடுகிறார்.
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் 'ப்ராக்சி' ஆட்சி நடந்தது. கடந்த 5 ஆண்டுகளாகதான் அதில் இருந்து தமிழ்நாடு மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நேரடியாகவே பா.ஜ.க. ஆட்சி என்று சொல்லிகொண்டு வருகிறார்கள்.
11 ஆண்டுகளாக மத்தியத்தில் நடைபெறுகின்ற என்.டி.ஏ ஆட்சியில் தமிழ்நாட்டிற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத உங்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை.
2019, 2021, 2024-என்று கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக தந்ததும் உங்களுக்கு அது புரியவில்லையா? தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக்கொள்ளாதபோது, தமிழர்கள் மட்டும் தங்களுடைய முடிவை மட்டும் எப்படி மாற்றிக் கொள்வார்கள்?
மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள்! மறுபடியும் நாங்கள்தான் வருவோம். நல்லாட்சியைத் தொடர்வோம். எதிலும் நம்பர் ஒன், அனைத்துத் துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்போம். என்று கூறி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வணக்கத்தைத் தெரிவித்து, விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






