குடிசையில் தீ விபத்து ... ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே பொத்தனூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் கீற்று மற்றும் தகரத்தால் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.
இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து உடனடியாக பாலகிருஷ்ணன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த பீரோ, கட்டில், டி.வி., மின்விசிறி, துணிமணிகள், உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






