இந்தியா வந்தடைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.. ரசிகர்கள் உற்சாகம்

14 ஆண்டுக்கு பிறகு மெஸ்சி இந்தியாவுக்கு வந்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
கொல்கத்தா,
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி இன்று இந்தியா வந்துள்ளார்.. 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வந்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கொல்கத்தா முழுவதும் மெஸ்சியின் ஜூரம் ஆட்டுவிக்கிறது. அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
மெஸ்சியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தான் நடத்திய டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மெஸ்சியை காண ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ரூ.7 ஆயிரத்துக்கு இரு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில் இப்போது மெஸ்சியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.
கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்சி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். 3 நாள் இந்திய பயணத்தில் அவர் மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார்.






