முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்

சிவராஜ் பாட்டீல் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (91 வயது) மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்ததுடன், இந்திய அரசியலில் பிரபல நபராகவும் இருந்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய உள்துறை முன்னாள் மந்திரியும், எனது மந்திரிசபை சகாவுமான சிவராஜ் பாட்டீல் முதுமை காரணமாக அவரது சொந்த ஊரான லத்தூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

மத்திய மந்திரியாக அவர் பணியாற்றிய காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கு துணை நின்றார். நாட்டில் எச்.ஐ.வி பரவலைத் தடுக்கும் நோக்குடன் ஓரினச் சேர்க்கையை குற்றமற்ற செயலாக மாற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எதிர்ப்பு எழுந்த போதிலும், தார்மீக அடிப்படையில் அவர் எனக்கு துணை நின்றார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி 2008-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தேன். அதனடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மன்மோகன்சிங் அரசு ஒப்புக்கொண்டது. அதன்பின் சமூகநீதிக்கு எதிரான சிலரால் அந்த வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக சமூகநீதி, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் எனது முயற்சிகளுக்கு துணை நின்ற சிவராஜ் பாட்டீலின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com