லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி

கோப்புப்படம்
பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாக கூறி தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் 64 வயதான பெண். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது செல்போனிற்கு கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், நான் உன்னுடன் கல்லூரியில் படித்த சக தோழி என்றும், தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் யார் என தெரியாமல் குழம்பிய அந்த பெண்ணிடம், அவரது கல்லூரி காலகட்டத்தில் படித்த நெருங்கிய தோழிதான் நான் என பெயரை சரியாக கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அவரும் வாட்ஸ்-அப் மூலமாக உரையாடல்களை தொடர்ந்துள்ளார்.
அப்போது நடந்த உரையாடலின் இடையே லண்டன் தோழி (போலி பெண்) தனது கணவர் இறந்து விட்டதாகவும், தற்போது லண்டனில் தான் தனியாக வசித்து வருவதாகவும் நம்பகத்தன்மையுடன் கூறியுள்ளார். இதனால் தஞ்சையை சேர்ந்த பெண்ணும் இரக்கப்பட்டு அந்த பெண் தோழியிடம் கருணை காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து லண்டனை சேர்ந்த அந்த பெண், உனக்கு தனது சார்பில் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு லண்டன் விமான நிலையத்தில் இருந்த ஏர்லைன் கார்கோ ஏஜென்சி (போலியானது) என்ற பார்சல் அலுவலகத்தில் இருந்து பேசியுள்ளனர்.
அவர்கள் அவரிடம், உங்களுக்கு லண்டனில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் இருப்பதாகவும், இதற்கு தகுந்த வரியான ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர், லண்டன் தோழியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வரியை தற்போது கட்டுமாறும் நான் இந்தியா வந்தவுடன் பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த அவர், வங்கி பரிவர்த்தனை மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை பார்சல் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். பின்னர் பார்சலில் சில லண்டன் பணம் (பவுண்ட்) இருப்பதால் இந்திய ரூபாய் மதிப்பில் மாற்ற ரூ.2 லட்சம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இப்படியாக பார்சல் ஊழியர்கள் தொடர்ந்து அபராத தொகை, பார்சல் இன்சூரன்ஸ் தொகை, பார்சல் உரிமையாளர் தொகை என வெவ்வேறு விதங்களில் பணம் கேட்டுள்ளனர். இதனை நம்பி பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.46 லட்சத்து 91 ஆயிரத்தை அந்த போலி பார்சல் அலுவலகத்தின் வங்கி கணக்கிற்கு தஞ்சையை சேர்ந்த பெண் அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் பார்சல் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து கேட்க தனது தோழி மற்றும் பார்சல் அலுவலகத்தின் தொலைபேசி எண்களை தஞ்சை பெண் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரது செல்போன் மற்றும் தொலைபேசி எண்களும் நீண்ட நாட்களாக இணைப்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






