எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்-அமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோவிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோவில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

"தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் பக்தர் மாநாடு நடத்தப்படவில்லை. வருகின்ற ஜூலை 7ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.400 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

பெருந்திட்ட வரைவு பணிகளின் கீழ் பழனியில் 98 கோடி ரூபாய் செலவிலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.86 கோடி செலவிலும் பணிகள் நடைபெற்று வருவதோடு, சுவாமிமலையில் ரூ.5 கோடி செலவில் மின்தூக்கி அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2,000 மூத்தக் குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டதை போல் இந்தாண்டும் 2,000 நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் கோவில்களுக்கு ரூபாய் 1085 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி இந்த ஆட்சியில் தான் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமைக்கு பெருமை சேர்த்து இருக்கின்றோம். ஆகவே முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்-அமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார்.

எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் அறம் சார்ந்த பணிகள், பக்தர்களுக்கு தேவையான பணிகள், ஆன்மிகப் பணிகள். ஆகவே இறைவன் இரண்டையும் பகுத்துப் பார்க்கின்ற ஆற்றல் பெற்றவர். நிச்சயமாக இது போன்ற போலியான நடவடிக்கைகளுக்கு இறைவன் எந்நாளும் துணை இருக்க மாட்டார். முருக பக்தர்கள் மாத்திரமல்ல ஆன்மிகம் சார்ந்த இறை அன்பர்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story